கோடை காலங்களில் கால்நடைகள் தீவனம் எடுப்பது மிகவும் குறைவாக இருக்கும். இந்த மாதிரி நேரங்களில் கால்நடை தீவனங்கள் காய்ந்து மற்றும் உலர்ந்து காணப்படும் மற்றும் தீவனங்களை இரண்டு மூன்றாக வெட்டாமல் முழுவதுமாக கால்நடைகளுக்கு கொடுப்பதால் சரியாக சாப்பிடாமல் போகிறது. மேலும் இதனால் கால்நடைகளின் பாலின் அளவு குறைவதுடன், செரிமானம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. கால்நடை பண்ணையாளர்களின் இந்த கவலையை போக்கும் வகையிலும், வேளாண்மையை எளிமைப்படுத்தும் விதமாக தீவனப் பற்றாக்குறையைப் போக்க ஊறுகாய் புல் தயாரிக்க தீவன புல் மற்றும் தட்டு வெட்டும் கருவி மிகவும் உதவியாக இருக்கும்.
அமைப்பு
தீவனப்புல் வெட்டும் கருவியானது தீவனப்பயிர்களை நுழைத்து, அதை சிறு துண்டுகளாக நறுக்கி கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் கைகளால் பயன்படுத்தும் வகையிலும், மின்சாரத்தின் மூலம் இயங்கும் முறையிலும் தனித்தனியே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கருவியில் செங்குத்தாக வெட்டும் கத்தி உள்ளதால் அதிக அளவுள்ள தீவனங்களை விரைவாகவும், வேகமாகவும் வெட்டி விடும்.
இக்கருவியானது 1 குதிரைத் திறன் முதல் 10 குதிரைத் திறன் வரையில் மின்சார மோட்டரினால் இயங்கக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
பயன்படுத்தும் முறை
கைகளால் தீவனத்தை நறுக்கும் இயந்திரத்தில் தீவன பயிர்களை நுழைக்க கை மற்றும் கால்களை பயன்படுத்தி கொள்ளலாம். மின்சாரத்துடன் இயங்கும் இயந்திரத்தில் தீவனங்களை நுழைத்தால், அது தானாகவே மின்சாரத்தின் உதவியுடன் தீவனத்தை நறுக்கி கொடுக்கும்.
பயன்கள்
தீவன புல் மற்றும் தட்டு வெட்டும் கருவியை பயன்படுத்தி சோளத்தட்டு, சீமைபுல், கோ-4, மக்காச்சோளம் போன்ற தீவனங்களை வேகமாக நறுக்கி கால்நடைகளுக்கு தேவையான அடர்தீவனம் மற்றும் ஊறுகாய் புல் போன்றவற்றை தயாரித்துக்கொள்ள முடியும்.
மேலும் தீவனத்தை மிகவும் சிறு சிறு துண்டுகளாக வெட்டி கால்நடைகளுக்கு உணவாக கொடுக்கலாம். இவ்வாறு கொடுப்பதன் மூலம் கால்நடைகள் விரைவாக சாப்பிடுவதுடன், எளிதில் செரிமானமும் ஆகிவிடுகிறது. இந்த கருவியை பயன்படுத்தி தீவனங்கள் வீணாகாமலும், சேதாரமாகாமலும் வெட்ட முடியும். இந்த கருவியை பயன்படுத்தி தீவனம் வெட்டும்போது கைகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கருவியானது எளிதில் துருப்பிடிக்காத வகையில் உள்ள இரும்பைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இக்கருவியின் கத்தியானது நீண்ட காலம் உழைக்கக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இக்கருவியை பயன்படுத்தி ஒரு மணி நேரத்தில் 600 கிலோ வரை உள்ள தீவன பயிர்களை வெட்ட முடியும். இந்த கருவியை எந்த இடத்திற்கும் எடுத்து செல்லும் வகையில் குறைவான எடையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும் கருவியின் பராமரிப்பு செலவானது மிகவும் குறைவாகும். அதுமட்டுமல்லாமல் தீவனம் வெட்டும் கத்தி மழுங்கி விட்டால் கருவியின் மூலமாக கத்தியை பட்டைத்தீட்டி கொள்ள முடியும்.
இந்த இயந்திரத்தை பயன்படுத்தி தீவனத்தை வெட்டி கால்நடைகளுக்கு கொடுக்கும் போது பால் உற்பத்தியானது அதிகரிக்கும். மேலும் இந்த கருவியானது தென்னை மட்டை மற்றும் தீவனங்களை மிக விரைவாக வெட்டி தருகின்றது.
கருத்துகள் இல்லை