கறவை மாடுகள் கன்று ஈன்ற 2-3 நாட்களில் பால் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றன. இது கன்று ஈனுவதற்கு சற்று முன்னும் அல்லது உச்சகட்ட பால் உற்பத்தியை அடையும் நேரத்திலும் உண்டாகிறது. கால்சியம் பற்றாக்குறையினால் பால் காய்ச்சல் ஏற்படுகிறது. அதிகமாக ஜெர்சி இனம் மற்றும் கலப்பின மாடுகளுக்கு ஏற்படுகிறது. வயது முதிர்ந்த மாடுகளை அதிகமாக இந்நோய் தாக்குகிறது.
அறிகுறிகள்
மாடுகள் தீவனம் எடுத்துக் கொள்ளாது.
மாடுகளின் தசைகள் தொளதொளவென்று காணப்படும்.
மாடுகளுக்கு அவற்றின் உடல் வெப்பநிலை, சாராசரி வெப்பநிலையை விட குறைந்து காணப்படும்.
மலத்துவாரம் திறந்து காணப்படும். மலச்சிக்கல் மாடுகளுக்கு இருக்கும்.
நாக்கை மாடுகள் வெளியே நீட்டிக் கொண்டு இருக்கும்.
மாடுகள் படுத்தே காணப்படும். கழுத்தை இடது பக்கமாக மடித்து வைத்துக் கொள்ளும்.
சிறுநீர் சிறிதளவே வெளியேற்றும்.
கண்களின் உட்பகுதி வறண்டு, கண்மணிகள் விரிந்து காணப்படும்.
மாடுகளின் மூக்கின் கீழ்பகுதி வறண்டு காணப்படும்.
தடுப்பு முறைகள்
பால் காய்ச்சல் வராமல் தடுக்க சினை காலத்தில் முறையாக பராமரிக்க வேண்டும்.
உலர் தீவனம் அதிகம் கொடுக்க வேண்டும். அகத்திக் கீரை கொடுக்கலாம்.
மாட்டிற்கு ஒரு நாளைக்கு 30-50 கிராம் தாது உப்பு கொடுக்கவேண்டும்.
மாடுகள் கன்று போடும் ஒரு வாரத்திற்கு முன்பு கால்சியம் நிறைந்த உணவுகளை கொடுக்க வேண்டும். ஆனால் அதிகளவில் கால்சியம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
தண்ணீரில் சிறிதளவு சுண்ணாம்புத் தண்ணீர் கலந்து தெளிந்த நீரை கொடுப்பதால் பால் காய்ச்சல் வருவதைத் தடுக்கலாம்.
பால் காய்ச்சல் அறிகுறிகள் தென்படும் சமயத்தில் கால்நடைமருத்துவரை அணுகி முறையான சிகிச்சை அளிக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை