கறவை மாடுகளில் பால் உற்பத்தி திறனை அதிகரிக்க இயற்கையாக வழிகள் பல உள்ளன.
கறவை மாடுகளை முறையாக பராமரித்தால் அவற்றின் பால் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யலாம்.
கன்று ஈன்ற 35-45 நாட்களுக்குள் கறவை மாடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்வதினால் கறவை மாடுகளின் வயிற்றில் உள்ள புழுக்கள் மற்றும் ஒட்டுண்ணி முட்டைகள் வெளியேறி மாடுகள் நன்றாக தீவனம் எடுக்கும். மாடுகள் உட்கொண்ட தீவனம் முழுமையாக செரிமானம் ஆகும்.
தீவனம் அதிகம் எடுத்தால் பால் அதிகம் சுரக்கும். மேலும் மாடுகள் 60 நாள் முதல் 80 நாட்களுக்குள் பருவத்திற்கு வரும். செயற்கை குடற்புழு மருந்துகளை உபயோகிக்கும் போது மருத்துவரின் ஆலோசனைப்படி வழங்க வேண்டும்.
இயற்கை முறையில் பயன்படுத்தும்போது குடற்புழு நீக்க மருந்தை தயாரித்து 1 மணி நேரத்திற்குள் மாடுகளுக்கு கொடுக்க வேண்டும்.
இயற்கையாகவே பால் உற்பத்தியை அதிகரிக்க அடர் தீவனத்தில் பரங்கிக்காய் 200-500 கிராம் மற்றும் வெல்லம் 50-100 கிராம் ஆகியவற்றை கலந்து காலை அல்லது மாலைகளில் அளிக்கலாம்.
அதாவது வாரத்திற்கு அதிகபட்சமாக 4 நாட்கள் கொடுக்கலாம். மேலும் மக்காச்சோளம், தவிடு, புண்ணாக்கு போன்றவற்றையும் கறவை மாடுகளுக்கு அளித்தால் அதிக பால் கொடுக்கும்.
தூய்மையான பால் உற்பத்தி
தூய்மையான பால் என்பது நுண்ணுயிரிகளின் அளவுகள் அதிகமாக இல்லாமல் ஓரளவிற்கு இருக்க வேண்டும்.
பால் உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் அதாவது கறவை மாடு, பால் கறவையாளர், பால் கறக்கும் பாத்திரம், சுற்றுப்புறம் மற்றும் நீர் ஆகியவை சுத்தமாக இருக்க வேண்டும்.
பாலை கறந்த பிறகு பல்வேறு பாத்திரங்களில் மாற்றக்கூடாது.
பால் கறக்கும் பாத்திரம் அகன்ற வாய் கொண்டதாக இல்லாமல், ஒடுக்கமான வாய் கொண்டிருத்தல் நல்லது. ஏனெனில் அகன்ற வாய் கொண்டதாக இருந்தால் தூசி, மாசு போன்றவை பாலில் கலக்க அதிக வாய்ப்புள்ளது.
பாலின் ஒரு பண்பு அதனின் அருகில் எந்த பொருள் இருந்தாலும் அதன் வாசனையை ஏற்றுக்கொள்ளும். அதாவது பால் கறக்கும் போது வெங்காயம், பூண்டு போன்றவற்றை உரித்தாலும் அதன் வாசனை பாலுக்கு வரும்.
கறவை மாடுகளுக்கு அளிக்கும் தீவனம் இயற்கையில் விளைவிக்கப்பட்டதாக இருந்தால் சிறந்தது. ஏனெனில் மற்ற தீவனத்தில் உள்ள கடின உலோகங்கள் போன்ற கழிவுகள் பாலுடன் கலக்கப்படலாம்.
கறவை மாடுகளுக்கு ஏதாவது நோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் 48 மணி நேரம் கழித்தே பாலை கறக்க வேண்டும்.
பால் கறக்கும் முன் மாட்டின் மடியை நன்றாக கழுவி சுத்தம் செய்து உலர்த்தி, பின்னரே பால் கறக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை