கால்நடைகளின் கொட்டகையின் மேற்புரத்தில் சாக்குத் துணிகளை ஈரப்படுத்தி பரவவிடுதல் அல்லது தென்னை கீற்று, பனை ஓலை முதலியன மேல் தண்ணீர் காலை, மாலை தெளித்துவிடுதல் மிகவும் அவசியம்.
கொட்டகையினுள் அதிக நெரிசல் இன்றி ஒரு மாட்டுக்கு 4 சதுரமீட்டர் பரப்பளவு இடம் கிடைக்குமாறு அமைக்க வேண்டும். கொட்டகையின் கூரை உச்சி 12 முதல் 14 அடி உயரம் இருக்குமாறு அமைக்க வேண்டும்.
கழிவுகளை முறையாக சுத்தம் செய்வதன் மூலம் தொற்றுநோய் தாக்குதலிலிருந்து பாதுகாக்கலாம். கோடை காலத்தில் கறவை மாடுகளுக்கு மடிநோய் தாக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் கொட்டகையின் தரை மற்றும் மாட்டின் மடி, பின்பகுதிகளை கிரிமிநாசினி கரைசல் கொண்டு தினமும் கழுவிவிடுதல் வேண்டும்.
கோடைகால மாடுகள் பராமரிப்பு
காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளும்ளைகள் பசுக்களை குளிப்பாட்டலாம். அவ்வாறு செய்தால் உடல் வெப்பம் தணிந்து பசுக்களில் பால் உற்பத்தி குறையாமல் செய்யலாம்.
வீட்டில் வளர்க்கப்படும் மாடுகளை வெயிலில் கட்டாமல் நிழல் தரும் மரங்கள் அல்லது கொட்டகையில் பகல் பொழுதில் வைத்திருப்பது நலம். நோய் தாக்குதலில் இருந்து காக்க கால்நடை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தகுந்த நோய் தடுப்பு முறைகளை மேற்கொள்வது அவசியம்.
கோடைகால தீவன மேலாண்மை
பசுக்களுக்கு மேய்ச்சல் நேரத்தை காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலுமாக மாற்றிக்கொண்டால் வெப்பத் தாக்கத்தை கட்டுப்படுத்தலாம்.
கோடைகாலத்தில் பசும்புல் நிறைய அளிக்க வேண்டும். வீரிய ரக ஒட்டுப்புல்லான கோ-3, தீவனச்சோளம், வேலி மசால் மற்றும் அகத்தி ஆகிய பசுந்தீவனம் அளித்தால் வெயில் அயற்சியை தடுத்தும் பால் உற்பத்தியையும், சினைப்பசுக்களின் கன்றின் வளர்ச்சியையும் மேம்படுத்தலாம். கால்நடைகளுக்கு சுத்தமான குடிநீர் நிறைய கொடுத்தல் அவசியம்.
அசோலா பாசியை தினமும் ஒரு மாட்டிற்கு 1.5 கிலோ அளவில் அளிக்கலாம். இதன் மூலம் புரதச்சத்து தேவையை ஈடுசெய்யலாம். ஹைட்ரோபோனிக் தீவனங்கள் அளிக்கலாம்.
அடர் தீவன கலவையை கோடை காலத்தில் கால்நடைகளுக்கு கொடுப்பது அதனுடைய உற்பத்தி திறனை பாதிக்காமல் இருக்கும். கறவை மாடுகளுக்கு ஒரு லிட்டர் பாலுக்கு 400 கிராம் அடர் தீவனம் என்ற அளவிலும் சினை பசுக்களுக்கு 1.5 கிலோ அடர் தீவனம் என்ற அளவிலும் அளிக்க வேண்டும்.
கோடை காலங்களில் பசுந்தீவனம் தட்டுப்பாடு ஏற்படுவதால் மூன்று மாதங்களுக்கு முன் ஊறுகாய் புல் தயாரித்து வைத்துக்கொண்டால் வெயில் காலத்தில் அளிக்க ஏதுவாகும்.
கருத்துகள் இல்லை