உயிரினங்களுக்கு காற்று, உணவு போன்றவை எவ்வளவு அவசியமாக இருக்கிறதோ அதுபோல நீரும் அவசியமான ஒன்றாகும்.
அதேபோல தான் கறவை மாடுகளுக்கு தண்ணீர் மிகவும் அவசியமாக உள்ளது. அதாவது கறவை மாடுகளுக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 25 முதல் 30 லிட்டர் வரை தண்ணீர் அளிப்பது அவசியமாகும்.
கறவை மாடுகளின் உடலில் 70 சதவீத நீரும், பாலில் 87 சதவீத நீரும் உள்ளது.
இந்த நீரானது உணவு உட்கொள்ளுதல், செரித்தல், செரித்த உணவிலிருந்து சத்துக்களை ரத்தத்தில் சேர்த்தல் போன்றவற்றிற்கு பெரிதும் பயன்படுகிறது. மேலும் உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றவும் பயன்படுகிறது.
மேலும், உடலின் செல்களில் உள்ள திரவத்தின் பி.எச். அழுத்தம் மற்றும் முக்கியமான உப்புச் சத்துகள் ஆகியவற்றை சீரான நிலையில் பராமரிக்கவும் உதவுகிறது.
கறவை மாடுகள் உட்கொள்ளும் அனைத்திலும் நீர் கலந்துள்ளது எனலாம். அதாவது பசுந்தீவனங்களில் 75 முதல் 90 சதவீதமும், வைக்கோலில் 10 முதல் 15 சதவீதமும் நீர் உள்ளது.
கறவை மாடுகள் எடுத்துக்கொள்ளும் நீரானது பெருமளவில் வியர்வை வழியாகவும், கழிவுகள் மூலமாகவும் வெளியேற்றப்படுகிறது.
நார் மற்றும் புரதச்சத்து நிறைந்த பொருட்களை உட்கொள்ளும்போது நீரின் தேவையும் அதிகரிக்கும். மாடுகளுக்கு அளிக்கப்படும் நீரானது, சுத்தமாகவும் கிருமிகள் இல்லாமலும், துர்நாற்றமில்லாமலும் இருத்தல் மிகவும் அவசியம்.
அதிக புரதம் நிறைந்த உணவு நீரின் தேவையை அதிகரிக்கின்றன.
நீர்க் குறைவினால் ஏற்படும் பாதிப்புகள்
நீர் கறவை மாடுகளுக்கு அவசியமாக தேவைப்படும் ஒன்று. குறைந்த அளவு நீரை எடுத்துக்கொள்ளும் போது செரிமானம் பாதிக்கப்படும். மேலும் உடலின் வெப்ப நிலை அதிகரித்து அயற்சியும், தளர்ச்சியும் ஏற்படும். நீர் எடுத்துக்கொள்ளும் அளவு 20 முதல் 22 சதவீதம் வரை குறையும் போது இறப்புகள் நேரிடலாம். ஆனால் நீர் அதிகம் உட்கொள்வதால் எந்தவித எதிர்விளைவுகளோ, பாதிப்போ ஏற்படுவதில்லை. சுத்தமில்லாத நீரை கொடுப்பதால் குடற்புழு நோய்கள், அடைப்பான், தொண்டை அடைப்பான் போன்ற நோய்கள் ஏற்பட அதிகமாக வாய்ப்புள்ளது.
எனவே சுத்தமான நீரை கறவை மாடுகளுக்கு கொடுப்பது சிறந்தது.
கருத்துகள் இல்லை