கைக்குழந்தை தூங்கும்போது பகலில் ஈ தொல்லை மிகவும் அவதியாக இருக்கும். குழந்தையின் படுக்கையைச் சுற்றி ஐந்தாறு புதினா இலைகளைக் கசக்கிப் போட்டால் ஈக்கள் வராமல் இருப்பதைத் தடுக்கலாம்.
வசம்பு ஒன்றை குழந்தையின் தலைமாட்டில் வைத்துவிட்டால் எறும்பு, கொசு மற்றும் பிற பூச்சிகளின் தொந்தரவு இருக்காது.
வீட்டில் சின்னக்குழந்தைகள் இருந்தால் அடிக்கடி வாந்தி அல்லது சிறுநீர் போய்விடும். ஒரு சிறிய பாட்டிலில் டெட்டால் அல்லது பினாயிலைக் கலந்து வைத்து, அதன் மூடியில் 4, 5 துவாரங்கள் போட்டு, தேவைப்படும்போது அப்படியே தெளித்துத் துடைத்தால் வீட்டில் வாசனை மணப்பதோடு குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
பாலில் தேன் சேர்த்து, வளரும் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் அவர்களுடைய உடல் வளர்ச்சி சீராகவும், சரியாகவும் அமையும்.
குழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருந்தால் பசலைக் கீரையை எடுத்துப் பொடிப்பொடியாக அரிந்து, வேக வைத்து சாதத்துடன் தினமும் கொடுக்கலாம்.
வளரும் குழந்தைகளுக்கு தேங்காயை வில்லைகளாகச் செய்து கடித்துச் சாப்பிடக் கொடுக்க வேண்டும். பசும்பாலைவிட அதிகச் சத்து தேங்காய்ப்பாலில் உள்ளது.
குழந்தைகளுக்கு காதில் சீழ் பிடித்தால் உடனே கவனியுங்கள். கவனிக்காமல் விட்டுவிட்டால் சீழ் மூளைக்குச் சென்று மூளை வளர்ச்சி பாதிக்கப்படும்.
வயிற்றுப்போக்கு காரணமாக நீர்ச்சத்து குறைவதால், தாகம் அதிகரித்து நாக்கு வறண்டு அழும்.. நாம் மருத்துவரைப் பார்க்கும் முன் சிறிது உப்புச் சர்க்கரைக் கரைசலைத் தண்ணீரில் கலந்து குழந்தைக்குக் கொடுத்தால், அழுகை நின்றுவிடும்.
குழந்தைகளுக்கு நகம் வெட்டுவதற்கு முன் சோப்பினால் கைகளைச் சுத்தம் செய்த பின்னர் நகம் வெட்டுங்கள். எளிதாகவும், சுத்தமாகவும் நகம் வெட்ட முடியும்.
குழந்தைகளுக்கு இரவு பேரீச்சம்பழம் 4, 5 கொடுத்து பால் அல்லது தண்ணீர் கொடுத்தால் அவர்களது மனோபலம் கூடும். மூளை பலப்படும்.
உங்கள் குழந்தைகளுக்கு நிறைய சாஃப்ட் டிரிங்க்ஸ் கொடுக்காதீர்கள். அதிலுள்ள பாஸ்பேட், 'கால்சியம்' சத்தை உடல் கிரகித்துக் கொள்ளும் திறனைக் குறைக்கிறது.
கருத்துகள் இல்லை