பூம்பூம் மாடு (Boom Boom Ox) என்பது குறிசொல்லி வித்தை காட்டுவதற்காக அலங்கரிக்கப்பட்டுள்ள ஒரு மாடு. இதை வளர்ப்பவர்கள் பூம் பூம் மாட்டுக்காரர்கள் என அழைக்கப்படுகின்றனர்.
பூம்பூம் மாட்டின் தோற்றம்
பூம்பூம் மாட்டை ஓட்டிக்கொண்டு, தோளில் உறுமியை மாட்டிக்கொண்டு வீடுவீடாக வரும் பூம்பூம் மாட்டுக்காரர் கிராமத்துத் தெருக்களில் கவர்ச்சிகரமானவர். திடகாத்திரமான அந்த மாட்டின் முதுகில் வண்ண வண்ண துணிகள், சீவியகொம்புகள், கழுத்து, நெற்றி என எங்கும் அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். பூம்பூம் மாட்டின் முகத்தில் அழகிய வண்ணமயமான முகபடம் அணியப்பட்டிருக்கும். கொம்புகள் பல வண்ணத் துணிகளால் சுற்றப்பட்டு நுனியில் குஞ்சலம் தொங்கவிடப்பட்டிருக்கும். துணியில் ஆங்காங்கே கோலிகள், பாசிகள் பொருத்தப்பட்டுப் பார்க்க அழகாக இருக்கும்.
பூம்பூம் மாடு வளர்ப்பது குலத்தொழில்
தமிழ் நாட்டில் இன்னும் சில குடும்பத்தினர் பூம் பூம் மாடுகளைக் கொண்டு குறி சொல்லுவதை குலத் தொழிலாகக் கொண்டுள்ளனர்.
கோவில் விழாக்கள், மக்கள் கூடும் இடங்களுக்குச் சென்று அல்லது வீடு வீடாகச் சென்று வித்தை காட்டுவது இத்தொழில் ஈடுபடுவர்களது வழக்கம். அலங்கரிக்கப்பட்ட மாட்டிடம் குறி சொல்பவர் கேள்வி கேட்பதும், அக்கேள்விகளுக்கும் ஆம் அல்லது இல்லை என்பது போல மாடு தலை ஆட்டுவதைக் கொண்டு குறி பலன்களைச் சொல்வர். மாட்டின் வழியே இறைவனே வந்து நமக்கு நல்ல வழி காட்டுவதாக எண்ணி மக்கள் மகிழ்வார்கள். இப்படி ஒரு காலத்தில் தமிழகத்தின் தெருக்களில் பூம்பூம் மாடுகள் பவனி வந்தது.
பூம்பூம் மாடு போகும் வீட்டிற்குப் பின்னால் சிறுவர் சிறுமியர் திரண்டு படை போலப் பின்னாலே போவார்கள். அந்த மாடு, மாட்டுக்காரரின் எல்லாப் பேச்சுக்கும் பணிந்து செயல்படுவது எப்படி என்று சிறுவர்கள் வியப்புடன் பார்ப்பார்கள்.
கருத்துகள் இல்லை