மழைக்காலத்தில் அதிகமாக பாதிக்கப்படுவது கால்நடைகள் தான். மழையினால் அதிகமாக நோய்கள் கால்நடைகளுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. கால்நடைகள் மழையில் நனைந்தால் பல்வேறு நோய்கள் ஏற்படலாம். அதனால் கால்நடைகளை முறையாக பராமரிக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும்.
கொட்டகை பராமரிப்பு
மழை பெய்யும் பொழுது மழைநீர் கொட்டகையின் உள்ளே விழாதபடி அமைத்தல் சிறந்தது. மழைக்காலங்களில் கொட்டகையில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தரையில் நீர் தேங்கினால் பசுக்களுக்குக் குளம்பு அழுகல் நோய் வர நேரிடும். தரையில் பள்ளங்கள் இருந்தால் அவற்றினை மூடி சரிசெய்ய வேண்டும். தரையின் ஈரத்தை உறிஞ்சச் சுட்ட சுண்ணாம்புத் தூளைத் தரையின் மீது தூவ வேண்டும். கூரையில் ஒட்டைகள் இருப்பின் மழைக்காலத்தின் முன்பே அதனை அடைத்து விட வேண்டும். கொட்டகையினைச் சுற்றி மழைநீர் தேங்காமல் வடிந்து விடுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் தண்ணீர் தேங்கினால் கொசுக்கள், ஈக்கள் மற்றும் புழுக்கள் அதிகம் உருவாகி நோய்கள் அதிகம் ஏற்படுத்தும்.
தொழுவத்தில் மழையால் ஏற்படும் சேற்று சகதிகளை அப்புறப்படுத்தி, மண்ணை கொட்டி அவற்றை பராமரிக்க வேண்டும்.
கொட்டகை சிமெண்ட் தரையாக இருப்பின் அவை வதவதப்பு தன்மை இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஈரமான தரைப்பகுதியில் இருக்கும் மாடுகளுக்கு மடிவீக்கம், புண் போன்றவை ஏற்பட அதிக வாய்புள்ளது. அத்தகைய சூழ்நிலைகளில் கல் உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் மடி மற்றும் குளம்புகளை கழுவி சுத்தப்படுத்த வேண்டும்.
ஈரமான பகுதியில் பேன், உண்ணி போன்றவைகள் அதிகம் இருக்கும். இவற்றை தவிர்க்க வேப்ப எண்ணெயை மாடுகளின் உடம்பில் தடவி விட வேண்டும். மேலும் மழைக்காலங்களில், மாலைநேரத்தில் கொட்டகையில் நொச்சி மற்றும் வேப்பிலையை கொண்டு புகைமூட்டம் செய்யலாம். இதனால் கொட்டகையில் கொசு தொல்லை குறையும்.
மழைக்காலங்களில் கொட்டகையைச் சுற்றிலும் தார்ப்பாய்கள் அல்லது தடுப்புகளை கட்டினால் கொட்டகை சற்று மிதமான வெப்பத்துடன் இருக்கும்.
தீவன மேலாண்மை
மழைக்காலங்களில் கால்நடைகளுக்கு கழிச்சல், செரிமான கோளாறு போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் ஈரமான பசுந்தீவனங்களை அப்படியே மாடுகளுக்கு கொடுக்காமல், அவற்றை நன்கு உலர்த்தி கொடுப்பது நல்லது.
மேலும் தவிடு, புண்ணாக்கு போன்ற அடர்தீவனங்களையும், வைக்கோல், சோளத்தட்டு போன்ற உலர்தீவனங்களையும் கூடுதலாக கொடுத்தால் பல குளிர்கால நோய்களிலிருந்து பாதுகாக்கலாம்.
மழைக்காலத்தில் அதிகாலை மேய்ச்சலை தவிர்க்கலாம். அதாவது காலை 9 மணி முதல் 4 மணி வரை மட்டும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பலாம்.
அடர் தீவனங்களை 15 நாட்களுக்கு ஒருமுறை என தயாரித்து கால்நடைகளுக்கு கொடுப்பது நல்லது.
மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டு விட வேண்டும். மேலும் மழைக்காலத்திற்கு முன்னதாக கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.
மழைக்காலத்தில் பிறக்கும் கன்றுகள் ஈரப்பதம் மற்றும் குளிரினால் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றன. எனவே மழைக்காலத்தில் கன்றுகளை நனையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நீர் மேலாண்மை
மழை காலத்தில் சுகாதாரமற்ற, தேங்கிய நீரை கால்நடைகள் குடிக்க அனுமதித்தால், நோய் ஏற்படும். எனவே, சுகாதாரமான, சுத்தமான தண்ணீரை வழங்க வேண்டும்.
Super
பதிலளிநீக்கு