ஒவ்வொரு தமிழ் வருடமும், தை மாதம் முதல் தேதியன்று, பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.
தை மாதத்தைத் தமிழர்கள் மங்கள மாதம் என்றும் போற்றுகின்றனர். ′தை பிறந்தால் வழி பிறக்கும்′ என்பது, ஆன்றோர்களின் அனுபவப்பூர்வமான வாக்கு ஆகும்.
சித்திரை மாதம் தமிழ் ஆண்டின் தொடக்கமாக இருந்தாலும், தை மாதத்தையே தமிழ் வருடத்தின் முதல் மாதம் என்று சொல்லும்படி, உழவர்கள் (விவசாயிகள்) இந்நாளில் பொங்கல் செய்தும், கடவுள் வழிபாடுகள் செய்தும் சிறப்பாகக் கொண்டாடுகின்றார்கள்.
அதிகாலையில் பிரம்மாவாகவும், மதிய வேளையில் சிவனாகவும், மாலையில் விஷ்ணுவாகவும், மும்மூர்த்தி ரூபமாக விளங்கும் சூரிய பகவானை இந்நாளில் பூஜிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
சூரியன் தனுசு ராசியிலிருந்து, மகர ராசியில் நுழைகின்ற தை மாதம் முதல் நாளை தைப்பொங்கலாகக் கொண்டாடுகின்றோம்.
தைத்திருநாளின் பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படுகின்றது.
சுப நாட்களில் வீட்டு வாசலில் நிறை குடம் வைப்பதன் மூலம் சகல செல்வங்களும் வீட்டில் நிரம்பப்பெற்று இருக்கும் எனவும் இதை மங்களத்தின் அறிகுறியாக இந்துக்கள் போற்றுகின்றார்கள்.
அத்துடன் நிறைகுடம் வைக்கும் இடத்தில் இலட்சுமி வருகை தருவாள் என்பதும் இந்துக்களின் நம்பிக்கை. இதற்காகவே புதிய பானை வாங்கப்பட்டு, அதில் திருநீறும் குங்குமமும் இட்டு, அப்பானையை தெய்வீகமாகக் கருதுவது வழக்கம்.
வீட்டில் பெரிய கோலம் வரைந்து புதுப்பானையில் புத்தரிசி இட்டு சர்க்கரை, வெல்லம், முந்திரி, திராட்சை எல்லாம் கலந்து பொங்கல் வைப்பார்கள்.
கரும்பு, மஞ்சள் கிழங்கு, காய்கறிகள், இளநீர், தென்னம்பாளை ஆகியவற்றை வைத்து சூரிய கடவுளுக்கு படைத்து வழிபடுகின்றனர்.
நகரங்களில் உள்ளோர், சமையலறையிலேயே பொங்கல் தயார் செய்துவிடுவார்கள். ஆயினும் பால்கனியிலிருந்தோ, மொட்டை மாடியிலிருந்தோ அந்தப் பொங்கலை சூரியனுக்குப் படைத்து மகிழ்வார்கள். தூபம், தீபம் காட்டி ஆதவனை ஆராதனை செய்வார்கள். இங்கும் கட்டாயம் கரும்பு நிவேதனம், முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
கருத்துகள் இல்லை