பால் கறக்கும் மாடுகளுக்கு எந்த அளவு சரியான தீவனம் அளிக்கிறோமோ அந்த அளவே பால் கிடைக்கும்.
புண்ணாக்கு போன்ற புரதச்சத்துள்ளவைகளையும், தவிடுகள், தானியங்கள் போன்றவை கலந்த சரிவிகித உணவு மிக அவசியமாக அளிக்க வேண்டும். அசோலா, கறவை மாடுகளுக்கு ஒரு எளிய தீவனமாக உள்ளது.
கடலைப்புண்ணாக்கு கறவை மாடுகளுக்கு மிகவும் ஏற்றது. பால் கறப்பதற்கு முன்பாகவோ அல்லது பால் கறக்கும் போது அடர் தீவனமும், பால் கறந்த பிறகு உலர் தீவனம் அளிக்க வேண்டும்.
பால்தரும் நாட்களில் 25 கிலோ வரை பசுந்தீவனமும், 6 கிலோ வரை உலர் தீவனமும், 3.5 கிலோ வரை அடர்தீவனமும் அளிக்க வேண்டும். இதர நாட்களில் 30 கிலோ வரை பசுந்தீவனமும், 5 கிலோ வரை உலர் தீவனமும், 1.0 கிலோ வரை அடர்தீவனமும் அளிக்க வேண்டும்.
நேப்பியர் போன்ற கடின தண்டுகொண்ட தீவனங்களை சிறிது துண்டாக வெட்டி அளிக்கலாம். பதப்படுத்தப்பட்ட பசுந்தீவனங்களை பால் கறந்த பின்பு அளிக்கலாம். குறைந்த பட்சம் 2 அல்லது 3 மாவுப் பொருட்களைச் சேர்ப்பது நல்லது.
1கி.கி வைக்கோல் 4-5 கிலோ புல் தேவையைக் குறைக்கும். இதன் மூலம் புரோட்டீன் பற்றாக்குறையைப் போக்கலாம். பூஞ்சான் தாக்கிய கெட்டுப்போன தீவனங்களை கால்நடைகளுக்கு அளிக்கக் கூடாது.
காலை, மாலை இருவேலைகளும் அடர்தீவனத்தைப் பிரித்து பால்கறக்கும் முன்பு அளிக்கவேண்டும். அதேபோல் உலர்தீவனமும் காலையில் பால்கறந்த நீர் அளித்த பின்பும், மாலையில் பால்கறந்த பின்பும் அளிக்க வேண்டும். தானிய வகைகள் சரியான அளவு அரைத்துக் கொடுக்க வேண்டும்.
பசும்புல் இல்லாத நிலையில் உலர் / அடர் தீவனம் கொடுக்கலாம். பால் கறவை வற்றிய பின்பும் அடர்தீவனம் தவிர மற்ற பசும்புல் உலர் தீவனங்கள் கொடுக்க வேண்டும்.
கோடைகாலத்தில் கறவை மாடுகளுக்கு பசுந்தீவனம், கலப்புத்தீவனம் கொடுக்கும் அளவை அதிகரித்து உலர், நார் தீவனம் அளிக்கும் அளவை குறைக்க வேண்டும். பசுந்தீவனங்களை பகல் வேளையிலும் உலர் தீவனங்களை இரவு நேரங்களிலும் வழங்க வேண்டும். நார் தீவனங்களை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொடுப்பதன் மூலம் உடல் வெப்பம் தணியும்.
கருத்துகள் இல்லை