ஒரு குழந்தையைப் பெற்று பாதுகாத்து வளர்ப்பதில் கடவுளுக்கு நிகராக அன்னையை இயற்கை படைத்துள்ளது. குழந்தை வாய் திறந்து பேசும் முன்பே குழந்தையின் அனைத்து செய்கைகளையும் கவனித்து அதன் தேவைகளைப் பூர்த்தி செய்யும் குணம் இயற்கையாகவே தாய்க்கு உண்டு.
சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களைப் பற்றி இக்கால பெற்றோர்கள் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
ஏனென்றால், வேலைச்சுமை காரணமாக கூட்டுக்குடும்பம் என்பது சிதைவடைந்து தனிக்குடும்பமாக வாழ வேண்டிய கட்டாயத்தில் அனைவரும் உள்ளனர்.
வீட்டில் மாமியார், பாட்டி என்று அனைவரும் இருந்தால் குழந்தையின் அசைவை வைத்து என்ன பாதிப்பு என்பதை கண்டறிவார்கள். ஆனால் இன்று குழந்தையை எப்படி வளர்ப்பது என்பதை செல்போன் மற்றும் டிவி மூலமாகவும் பார்த்து தெரிந்து கொள்ளும் நிலை உள்ளது.
ஆனால் நம் முன்னோர்கள் குழந்தைகளுக்கு எந்த நோயின் பாதிப்பு இருந்தால் எத்தகைய அறிகுறிகள் ஏற்படும் என்பதை அறிந்து கூறுவார்கள். அதேபோல அதை சரி செய்வதற்கான வழிமுறைகளையும் கூறியுள்ளனர்.
முதலில் நோய்க்கான அறிகுறிகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
காய்ச்சல்
* குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்ப்பட்டால், குழந்தை தன் உடலை அடிக்கடி முறுக்கிக் கொள்ளும்.
* உடல் வலியால் அழுது கொண்டே இருக்கும்.
* லேசான இருமல் இருக்கும்.
* பால் குடிக்காது.
* முகம் சோர்வாக காணப்படும்.
* வயிறு மற்றும் தலை சூடாக காணப்படும்.
அக்கி
* குழந்தையின் நாக்கு மற்றும் உதடு வறண்டு காணப்படும்.
* அடிக்கடி அழும்.
* காய்ச்சல் இருக்கும்.
* வயிற்றுப் பொருமல்
* உடல் மிகவும் வாட்டமாக இருக்கும்.
* பால் குடிக்காது.
* மலம் வெளியேறாது.
காமாலை
* குழந்தைக்கு முகம், கண்கள், நகம் முதலியவை மஞ்சள் நிறமாக மாறும்.
* பசியில்லாமல் இருக்கும்.
* பால் குடிக்காது.
* சிறு நீர் மஞ்சளாக வெளியேறும்.
* மலம் சாம்பல் நிறமாக இருக்கும்.
நாக்கில் பாதிப்பு
* குழந்தை சாப்பிட மிகவும் கஷ்டப்படும்.
* உமிழ்நீர் அதிகம் சுரக்கும்.
* கன்னங்கள் வீங்கி இருக்கும்.
* நாக்கு தடித்து வெள்ளையாக காணப்படும்.
* சில சமயங்களில் நாக்கில் புள்ளி புள்ளியாக புண்கள் காணப்படும்.
* வாயை மூட முடியாமல் குழந்தை அழும்.
காது பாதிப்பு
* கையினால் காதுகளைத் தொடும்.
* அடிக்கடி காதுகளை அழுத்தித் தேய்க்கும்.
* தூங்காமல் இருக்கும்.
* பால் குடிக்காது.
கழுத்தில் பாதிப்பு
* குடித்த பால் ஜீரணம் ஆகாது.
* தொண்டையில் சளி கட்டும்.
* பசி எடுக்காது.
* காய்ச்சல் இருக்கும்.
* குழந்தை சோர்வாக காணப்படும்.
வயிற்று வலி
* குழந்தை அழுதுகொண்டே இருக்கும்.
* தாய்ப்பால் குடிக்காது.
* முகம் வியர்த்துக் காணப்படும்.
தொற்று நோய்கள்
குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்றுநோய்களில் 90 சதவிகிதம், குழந்தைகளின் பாதுகாப்பில் சரியான கவனம் இல்லாததால் நிகழ்கிறது.
புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது.
இவ்வாறு ஏற்படும் நுண்ணுயிர் கிருமிகளின் நோய்த்தொற்று பற்றி இப்போது காணலாம்.
சளி, இருமல்
வைரஸ் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் நம் உடலில் இருக்கின்ற நோய் எதிர்ப்பு சக்திக்கு எதிராகப் போராடுவதால் ஏற்படும் பாதிப்பு தான் சளி மற்றும் இருமல் .
காற்று மற்றும் தண்ணீரில் உள்ள மாசுக்களால் இந்த மாதிரியான நோய்கள் ஏற்படுகின்றன்.
மேலும், கைகளைச் சரியாக கழுவாமல் குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவதாலும் தொற்று நோய்கள் ஏற்படுகின்றன.
காய்ச்சல்
காய்ச்சல் பொதுவாக ஒருவருக்கு ஏற்பட்டிருந்தால் எளிதாக நோய் தொற்று மூலமாக பரவுகிறது. தொற்று அல்லாமலும் பரவலாம்.
ஆனால், 90 சதவிகிதக் காய்ச்சல் தொற்று மூலமாகத் தான் பரவுகிறது.
அதிகப்படியான காய்ச்சல் சில குழந்தைகளுக்கு வலிப்பு நோயை கூட உண்டாக்கும். எனவே, அதிகப்படியான காய்ச்சல் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
வயிற்றுப் போக்கு
பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றினால் ஏற்படும் பாதிப்பு இது.
சரியாகக் காய்ச்சி வடிகட்டப்படாத குடிநீர்,
மூடி வைக்காத உணவு போன்றவற்றைக் குழந்தைக்குக் கொடுப்பதனாலும் , குழந்தைக்கு கிருமித் தொற்று ஏற்பட்டு வயிற்றுப் போக்கு ஏற்படும்.
சில சமயங்களில் வயிற்றுப் போக்குடன் வாந்தியும் இருக்கும். இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு டைபாய்டு வரலாம்.
குழந்தைகளின் கைவிரல் மற்றும் நகங்களில் அழுக்குகள் இருந்தால், அவர்கள் உண்ணும் உணவு மூலமாக கிருமித் தொற்று ஏற்பட்டு வயிற்றுப் போக்கு ஏற்படும்.
எனவே குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கிறோம் என்பதைப் போலவே எப்படிக் கொடுக்கிறோம் என்பதையும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
சின்னம்மை
வேரிசெல்லா என்ற வைரஸால் ஏற்படக் கூடியது.
சிறு சிறு கொப்பளங்கள், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் காணப்படும்.
கோடை காலங்களில் இது குழந்தைகளை அதிகமாகத் தாக்கும்.
நோய்த் தொற்று உடையவரின் சுவாசக் காற்றின் மூலம் பரவும் என்பதால் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
மணல் வாரி அம்மை
இந்த அம்மையும் ஒரு வகையான வைரஸ் தொற்று நோய்.
குழந்தையின் முகம், கண்கள் சிவந்து காணப்படும்.
தோலில் மணலை அள்ளித் தெளித்தது போல பொரிப் பொரியாகக் காணப்படும்.
வாய்ப்புண், வயிற்றுப் போக்கு, நிமோனியா போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
இதுதவிர விட்டமின் ஏ சத்துக் குறைபாடும் காசநோய் பாதிப்பும் கூட உருவாகலாம்.
மஞ்சள் காமாலை
ஹெபடைடிஸ் ஏ மற்றும் பி என்கிற வைரஸ் மூலமாக இந்த மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது.
பிறந்து 10 முதல் 15 நாட்கள் ஆன பிறகே குழந்தையின் கல்லீரல் முழுமையான செயல் திறன் பெறும்.
எனவே, குழந்தையின் உடலில் ஏற்படும் மஞ்சள் நிறமாற்றமானது இரண்டு வாரங்களுக்குள் சரியாகிவிடும்.
ஆனால் இரண்டு வாரங்களுக்கும் மேலாகத் தொடர்ந்தால் அது மஞ்சள் காமாலை நோயாக இருக்கலாம்.
கண்கள் மஞ்சள் நிறமாகக் காட்சியளிக்கும். சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் வெளிப்படும். குழந்தைகள் பசியில்லாமல் சோர்ந்து காணப்படுவார்கள். கல்லீரல் வீக்கம் அடைவதோடு சில சமயங்களில் முழுமையாகவே செயற்பட முடியாத நிலைக்கும் தள்ளப்படலாம்.
எனவே, குழந்தைகளுக்கு கொடுக்கும் குடிநீர் மற்றும் உணவு சுகாதாரமாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
சிறுநீரகப் பிரச்சனை
குழந்தைகள் சிறுநீர் மலம் கழித்த பின்னர் சரியாக சுத்தம் செய்யவில்லை எனில், சிறுநீர்த் தாரையில் கிருமித் தொற்று ஏற்படும். இதனால் குழந்தைகளின் சிறுநீர் வெளியேறும் அளவு குறையும்.
மேலும் சிறுநீர் கழிக்கும் போது அந்தப் பகுதியில் வலி மற்றும் எரிச்சல் ஏற்படும். இது அதிகமானால் சிறுநீரோடு இரத்தமும் கலந்து வரும். எனவே, குழந்தைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள கற்றுக்கொடுங்கள்.
கருத்துகள் இல்லை