மாட்டுப்பண்ணை அமைத்தல்!
மாடுகளை முறையாக பேணி வளர்ப்பதற்காகவும், எந்த நோயும் தாக்காமல் இருக்கவும் பண்ணை அமைக்கப்படுகிறது. அந்த பண்ணையானது நல்ல காற்றோட்ட வசதியுடனும், மாடுகளுக்கு ஏற்ற சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறும் இருக்க வேண்டும்.
இடம் தேர்வு
முதலில் பண்ணை அமைக்க தேவையான இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். பண்ணை அமைக்கப்படவுள்ள இடத்தின் மண், கட்டப்படும் தூண்களை தாங்கி நிறுத்தக்கூடிய அமைப்பினை பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் இடங்கள் பாறைகள், களிமண் போன்ற மண்ணாக இருக்கக்கூடாது. கடினமான மண் கொண்ட இடம் பண்ணை அமைக்க ஏற்றது. போதுமான அளவு இடம் இருந்தால் மட்டுமே பண்ணையை எதிர்காலத்தில் விரிவாக்குவது எளிதாகும். தீவன உற்பத்திக்கு 2 மாடுகளுக்கு ஒரு ஏக்கர் வீதம் நிலம் தேவைப்படும்.
வடிகால் வசதி
தேர்ந்தெடுத்த இடத்தின் மண் நல்ல வடிகால் வசதி கொண்டதாக இருக்க வேண்டும்.
மழை பெய்யும் போது தண்ணீர் நன்றாக வடிவதற்கு ஏற்ற வகையில் வடிகால்கள் அமைக்க வேண்டும். இவ்வாறு அமைப்பதால் பண்ணையில் ஆரோக்கியமான சூழ்நிலை உருவாவது மட்டுமன்றி, பண்ணையிலுள்ள கட்டிடங்கள் ஈரமாவதையும் தடுக்கலாம். இதனால், மழைக் காலங்களில் ஏற்படும் நோய்களைத் தடுக்கலாம்.
அமைக்கும் முறை
இடத்தை தேர்வு செய்த பின்னர், சிமெண்ட் அல்லது கான்கிரீட் கொண்டு தரையை ஒரு பக்கம் சரிவாகவும், சொரசொரப்பாகவும் இருக்குமாறு அமைக்க வேண்டும்.
மற்றபடி மாடுகள் படுக்க ஏற்றதாக இருக்க ஆழ்கூள தரையினை அமைக்கலாம். அந்த ஆழ்கூள தரையானது வைக்கோல், காய்ந்த இலை போன்ற பொருட்களை கொண்டு இருத்தல் நல்லது.
பின் அந்த இடத்தில் நம்மிடம் உள்ள கால்நடைகளுக்கு ஏற்றவாறு தேவையான நீள, அகல அளவினை கொண்டு, அதில் தூண்களை அமைக்க வேண்டும். அந்த தூண்களை மரத்தாலோ, செங்கல் கொண்டோ அமைக்கலாம். ஒரு மாட்டிற்கு 2-2.5 மீட்டர் அளவுள்ள இடம் தேவைப்படும். கன்றுகளாக இருந்தால் 1.5 மீட்டர் வரை தேவைப்படும்.
கூரை அமைத்தல்
தூண்களின் மீது சிமெண்ட் அட்டை அல்லது ஓடுகளை பயன்படுத்தி கூரை அமைக்க வேண்டும். மாடுகளுக்கு ஓலைக் கூரையாலான பண்ணை அமைப்பது சிறந்தது. மேலும் பண்ணையை சுற்றிலும் சுவர்கள் அமைப்பதை தவிர்க்கலாம். அதற்கு பதிலாக வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாக்க வைக்கோல் அல்லது மூங்கில் கொண்ட திரைகளை அமைக்கலாம். சுவர் அமைப்பதால், அவற்றின் மூலம் பாக்டீரியா மற்றும் பூஞ்சாண் உருவாகி மாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
தண்ணீர் வசதி
பண்ணையில் பல்வேறு தேவைகளான மாடுகளை கழுவுதல், பசுந்தீவன உற்பத்தி, பால் பதனிடுதல், பாலிலிருந்து உப பொருட்கள் தயாரித்தல், மற்றும் குடிநீர் போன்றவற்றிற்கு போதுமான அளவு தண்ணீர் இருப்பது அவசியமாகும். எனவே தொடர்ந்து பண்ணையின் நீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய ஏற்றவாறு அமைக்க வேண்டும்.
மின்சார வசதி
பண்ணையில் மின்சார வசதி இருப்பது மிகவும் அவசியமாகும். பண்ணையிலுள்ள பல்வேறு உபகரணங்களை இயக்குவதற்கு, அதாவது பால் கறக்கும் இயந்திரம், தீவனம் வெட்டும் இயந்திரம் போன்றவற்றை இயக்கவும், வெளிச்சம் தரும் மின்விளக்குகளுக்கும் மின்சாரம் தேவைப்படும்.
பண்ணை திசை அமைப்பு
பண்ணை கிழக்கு மேற்காக நீளவாக்கில் அமைக்க வேண்டும். அப்போதுதான் காற்று, சூரிய ஒளி நன்றாக கிடைக்கும். கொட்டகையில் நல்ல வெளிச்சமும் காற்றோட்டமும் இருப்பது மாடுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
பண்ணையின் சுற்றுச்சூழல்
பண்ணைகளை சுற்றி உயரமாக வளரக்கூடிய மரங்களை வளர்க்கவேண்டும். இதனால், காற்றின் வேகம் குறைக்கப்பட்டு, வெயிலின் தாக்கமும் குறைக்கப்படும். அதிக ஒலி எழுப்பும் தொழிற்சாலைகள், ரசாயன தொழிற்சாலைகள், சாக்கடைக் கழிவுகள் வெளியேற்றப்படும் இடங்கள் போன்றவற்றிற்கு அருகில் பண்ணையை அமைக்கக்கூடாது. கால்நடைகளின் உற்பத்தித்திறனை தேவையற்ற சத்தமும் பாதிக்கும். எனவே கால்நடைப் பண்ணையானது ஒலி எழுப்பும் இடங்களிலிருந்து தள்ளி அமைக்க வேண்டும்.
சந்தை மற்றும் போக்குவரத்து வசதி
கால்நடைப் பண்ணையானது நகரம் அல்லது கிராமத்தில் அமைந்தாலும், கால்நடைகளிலிருந்து பெறப்படும் பால், மற்றும் இதர பொருட்களை விற்பனை செய்வதற்கு அருகில் உள்ள சந்தை வசதியை அறிந்திருக்க வேண்டும்.
பண்ணை அமையுமிடத்தினை எளிதில் அடைவதற்கும், பண்ணையில் உற்பத்தியாகும் பொருட்களை விற்பனை செய்வதற்கும் முறையான சாலை வசதியும் போக்குவரத்து வசதியும் அவசியமாகும். இதனால் பண்ணையிலிருந்து பெறப்படும் உற்பத்திப்பொருட்கள் வீணாவதை தடுக்கலாம்.
தீவன தொட்டி
கோடைக்காலங்களில் பண்ணைகளில் நல்ல காற்றோட்ட வசதி உள்ளவாறு இருந்தால் ஏற்றது. மாடுகளுக்கு கொடுக்கும் தண்ணீர் தொட்டியை நிழலில் வைக்க வேண்டும். அமைக்கப்படும் பண்ணையானது தீவனம் கொண்டு செல்லும் பாதை, தீவனத்தொட்டி, மாடுகள் நிற்க தேவையான இடம், கழிவுநீர் செல்ல வாய்க்கால், பால் கறக்க தேவையான இடம் ஆகியவற்றை கொண்டிருத்தல் வேண்டும்.
தீவனத்தொட்டியானது ஒரு கால்நடைக்கு 2-8 அடி இடைவெளியுடன் இருக்க வேண்டும். தேவையான அளவு குடி தண்ணீர் அளிக்க 10 அங்குலம் அளவு அகலமான தண்ணீர் தொட்டியும் அமைக்க வேண்டும். மேலும் தீவனங்களை சேமித்து வைக்க அறைகள் உள்ளவாறு அமைக்கலாம். இந்த கொட்டகையை எருதுகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை