உழவர்களுக்கு முதுகெலும்பாக விளங்குவது மாடுகளே அதனால் மாடு வாங்கும் போது சுழி பார்த்து வாங்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறுவர். இது அனைவர் இடத்திலும் ஆழமாக பதிந்துள்ளது. அந்த வகையில் நன்மை மற்றும் தீமை தரும் சுழிகள் உள்ளது.
நன்மை தரும் சுழிகள்
கோபுர சுழி
திமிலின் மேலும் திமிலின் முன்புறத்தில் அல்லது திமில் மற்றும் முதுகு சேருமிடத்தில் இருப்பது கோபுர சுழியாகும். இதை ராஜா சுழி என்றும் கூறுவர். இந்த சுழி உள்ள மாட்டை வைத்திருப்போர் மிகுந்த செல்வத்துடன் வாழ்வர்.
இலட்சுமி சுழி
கழுத்தின் ஒரு பக்கத்தில் கொஞ்சம் தள்ளி இருப்பது லட்சுமி சுழியாகும். இந்த சுழி உள்ள மாடு மிகவும் அதிர்ஷ்டம் கொடுக்க கூடியது. ஆனால் இந்த சுழி உள்ள மாடு கிடைப்பது அரிது.
தாமணி சுழி
மாட்டை பிணைக்கும் கயிறு அல்லது தாமணி எனப்படும் நடு முதுகுத் தண்டில் நீளமாக ஒரு கோடும் கோட்டின் இருபுறமும் இரு சுழிகள் இருந்தால் தாமணி சுழி எனப்படும். அல்லது முன்னங்கால்களுக்கும் கழுத்துக்கும் இடையில் அவை தாடியின் இருபுறங்களிலும் இருக்கலாம். இந்த சுழி உள்ள மாட்டை வாங்குபவர்கள் மேலும் ஏராளமான மாடுகளை வாங்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
விரி சுழி
முதுகுத்தண்டின் இடது பக்கத்தில் மட்டும் இருக்கும் சுழி விரி சுழி. இந்த சுழி உள்ள மாட்டை வாங்குபவர் நன்மைகளை அடைவர் என்பது நம்பிக்கை.
இரட்டைக் கவர் சுழி
முன்னங்கால் முட்டியின் இருபக்கத்திலும் இரண்டு பிளவு போல் இருப்பது இரட்டை கவர் சுழியாகும். இந்த சுழி உள்ள மாட்டை வாங்குபவர்களுக்கு மிகுந்த நன்மை உண்டாகும். இரண்டு பிளவு இல்லாமல் ஒரு பக்கத்தில் மட்டும் பிளவு இருந்தால் வீட்டில் இருக்கும் எல்லா மாடுகளுக்கும் இது தீமையாக அமையும் என்பர்.
பாசிங் சுழி
இரு கண்களுக்கு மேல் நெற்றியில் இருக்கும் சுழி இரட்டையாய் இருந்தால் அது பாசிங் சுழி, ஜோடி சுழி எனப்படுகிறது. இந்த சுழி உள்ள மாடு உள்ளவருக்கு கல்யாணம் விரைவில் நடைபெறும், மனைவியை இழந்தவருக்கு மருமணமாக வாய்ப்புகள் அமையும் என்பது நம்பிக்கை.
ஏறுபூரான் சுழி
மாட்டின் முதுகின் மத்தியில் பூரான் போன்று முடி பிளவு இருக்கும். அந்த சுழி முன்பக்கமாக வந்து முடிந்திருந்தால் அது ஏறு பூரான் சுழி எனப்படும். இச்சுழி உள்ள மாடு வளர்த்தால் சகல செல்வத்தையும், நல்ல அதிர்ஷ்டத்தையும் தரும் என நம்பப்படுகிறது.
விபூதி சுழி
மாட்டின் இரு கண்களுக்கும் நடுவில் இரண்டு சுழிகள் இரு புருவக்கோடுகளின் கீழிருக்கும். இந்த சுழி உள்ள மாடுகளை வைத்திருப்பவருக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.
கொம்புதானா சுழி
இந்த சுழி கொம்புகளின் கீழ்ப்பக்கத்தில் இருக்கும். இந்த சுழி உள்ள மாடு இருந்தால், மந்தையில் உள்ள அனைத்து மாடுகளுக்கும் ஆரோக்கியமாக இருக்கும் மற்றும் மாடுகளின் எண்ணிக்கை அதிகமாகும் என்று நம்பப்படுகிறது.
ஏறுநாக சுழி
மாட்டின் வாலின் மேல்பக்கம் முதுகு நோக்கி தொடர்ந்து சுழித்து செல்லும் சுழி ஏறுநாக சுழி என்று கூறப்படுகிறது. இந்த சுழி உள்ள மட்டை வாங்குபவர்களுக்கு நன்மை பயக்கும் அல்லது மங்களம் உண்டாகும் என்று நம்பப்படுகிறது.
நீர் சுழி
மூத்திர துவாரத்திற்கு பக்கத்தில் காளை மாடுகளுக்கு இருக்கும் சுழி நீர் சுழி. இதை நல்ல சுழி என்றும் இதை கெட்ட சுழி என்றும் சொல்லமுடியாது.
கருத்துகள் இல்லை