புரட்டாசி மாதம் அமாவாசைக்கு பிறகு பூர்வ பட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி திதியில் முடியும் ஒன்பது இரவுகளே நவராத்திரி ஆகும். படைத்தல், காத்தல், அழித்தல் எனும் மூன்று சக்திகளைக் கொண்ட அன்னையின் அருள் வேண்டி பூஜை செய்வதே நவராத்திரி வழிபாடாகும். நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கன்னிகையர்களை பூஜிக்க வேண்டும். நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சிறந்த வழிபாடாகும்.
நவராத்திரி வழிபாடு செய்யும் வழிமுறை:
புரட்டாசி அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமையில் துவங்கி 9 நாட்கள் நவராத்திரி அனுசரிக்க வேண்டும்.
நவராத்திரிக்கு முதல் நாள் அதாவது அமாவாசை தினத்திலேயே பூஜைக்கு வேண்டியவற்றை சேகரிக்க வேண்டும். அன்றைய தினமே பூஜையறையைக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
பூஜையறையில் பூஜை மண்டபம் அமைப்பதற்கான இடம் மேடு பள்ளம் இல்லாமல் சமதளமாக இருக்க வேண்டும்.
அதை பசுஞ்சாணத்தால் மெழுகி, கோலமிட்டு செம்மண் இட வேண்டும். அந்த இடத்தின் நான்கு மூலைகளிலும் 16 முழம் உயரத்துடன் தூண்கள் நட்டு, தோரணங்களால் அலங்கரிக்க வேண்டும்.
தூண்களில் அம்பாள் உருவம் உள்ள சிவப்புக் கொடி கட்டுவது சிறப்பு.
பூஜை செய்யும் இடத்திற்கு மையமாக நான்கு முழம் நீள-அகலமும், ஒரு முழம் உயரமும் கொண்ட ஒரு பீடம் (மேடை) அமைக்க வேண்டும்.
பிரதமை அன்று அதிகாலையில் எழுந்து நீராடி பூஜைக்குத் தயாராக வேண்டும் (இயன்ற வரையிலும், தகுந்த அந்தணர்களை வரவழைத்து, வழிபாடுகள் நடத்தி வைக்கச் சொல்வது சிறப்பு).
பூஜை மேடையில் வெண்பட்டுத் துணி விரித்து, அதன் மீது சங்கு-சக்கரம், கதை மற்றும் தாமரை ஏந்திய நான்கு கரங்களுடன் இருக்கும் தேவியின் திருவுருவம் அல்லது 18 கரங்கள் கொண்ட அம்பாளின் திருவடிவத்தை வைத்து தூய ஆடை-ஆபரணம், மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும்.
அருகில் அம்பிகைக்கான கலச பூஜைக்காக கலசம் வைத்து அதில் நீர் நிரப்பி, தங்கம், ரத்தினம் ஆகியவற்றைப் போட்டு மாவிலைகளை மேலே வைத்து மங்கல இசை முழங்க, வேத கோஷம் ஒலிக்க, பூஜையைத் துவங்க வேண்டும்.
பலவிதமான பழரசங்கள், இளநீர், மாதுளை, மா, பலா, வாழை முதலானவற்றையும், அன்னத்தையும் (சித்ரான்னங்கள்) நெய்வேத்தியம் செய்து வழிபட வேண்டும். இப்படி தினமும் மூன்று கால பூஜை செய்தல் வேண்டும்.
9 நாட்களும் விரதம் இருப்பவர்கள் பூஜை முடித்து, ஒரு வேளை உண்ண வேண்டும். தரையில் படுத்துத் தூங்க வேண்டும்.
9 நாட்கள் விரதம் இருக்க இயலாதவர்கள், சப்தமி, அஷ்டமி, நவமி ஆகிய மூன்று நாட்கள் விரதமிருந்து வழிபடலாம்.
அதுவும் இயலவில்லை எனில், அஷ்டமி தினத்தில் அம்பாளை பூஜித்து வழிபட்டு அருள் பெறலாம்.
இந்த தினத்தில்தான் தட்ச யாகத்தை அழித்த அம்பாள், அநேக கோடி யோகினியருடன் தோன்றினாள். அதனால் இந்த தினம் விசேஷமானது.
கருத்துகள் இல்லை