பூஜை அறையில், கடவுள் படங்களின் முன்பு முதல்நாள் இரவே, புது ஆடைகளுக்கு மஞ்சள் தொட்டுப்பூசிக் குவியலாக வைத்திருப்பார்கள்.
தீபாவளிப் பண்டிகைக்கான புத்தாடையைப் பெரியவர்களின் ஆசிர்வாதத்தோடு பெற்றுக்கொள்வார்கள்.
புதிய ஆடைகளை அணிந்து, பூஜை அறையில் உள்ள கடவுளை வணங்கி, பெரியவர்களையும் வணங்க வேண்டும். இல்லத்தில், சுத்தமான, சுவையான சிற்றுண்டிகள் செய்து, கடவுள் படங்களின்முன் படைக்க வேண்டும்.
இல்லம் முழுவதும் தீபங்கள் ஏற்றி வைத்தல் மிகவும் சிறப்பு. இதன்பின்னர், முறையாக ஶ்ரீ விஷ்ணு பகவானையும், ஶ்ரீ லட்சுமி தேவியையும் வழிபட வேண்டும்.
பூஜைக்குப் பின்னர், சிற்றுண்டிகளைக் குடும்பத்தில் உள்ள அனைவரும் உண்டு, பக்கத்தில் உள்ள மக்களுக்கும் கொடுத்து எல்லாரும் மகிழ்ச்சியாக தீபாவளியைக் கொண்டாட வேண்டும்.
பெரியவர்கள் முதல், சிறியவர்கள் வரை, தீபாவளி அன்று பட்டாசுகள் வெடித்து மகிழ்வார்கள். நம்மிடம் உள்ள குரோதம், லோபம், மோகம், மாச்சரியம் ( மூட எண்ணம் ) ஆகிய தீய சக்திகளை, இறைவனுடைய திருநாமங்களின் மகிமையால் தூள்தூளாக்க வேண்டும் என்பதற்காகவே, தீபாவளியன்று பட்டாசுகளை வெடித்து மகிழ்கிறோம்.
இப்படி பலவிதமான காரணங்கள் கொண்டு தீபாவளித் திருநாள் கொண்டாடப்பட்டாலும், அத்திருநாள் நமக்கு உணர்த்தும் பாடம் ஒன்றே ஒன்றுதான். "தீமைகள் என்னும் இருள் அகன்று, உலகம் முழுவதும் பக்திப் பேரொளியைப் பெற வேண்டும் " என்பதே அது.
எனவே, தீபாவளித் திருநாளில், பெரியவர்கள் வகுத்துத் தந்த வழியில், முறையாக இறைவனைப் பூஜித்து அவனது அருள் பெற வேண்டும்.
கருத்துகள் இல்லை