ஊக்கப்படுத்தும் சொற்கள்
நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்வதற்கு பெற்றோர் குழந்தைகளுக்குச் செய்யும் உதவி, குழந்தை நல்ல பழக்கங்களை கடைபிடிக்கும்போது அதைப் பாராட்டுதல், கெட்ட பழக்கங்களை குழந்தை வெளிக்காட்டும் போது அவற்றை ஆதரிக்காத முகபாவம், எது நல்லது-எது கெட்டது என்பதில் பெற்றோர் தொடர்ந்து உறுதியாக இருப்பது ஆகியவை குழந்தைகளுக்கு ஒழுக்கத்தைக் கற்று கொடுப்பதின் அடிப்படை விதிகள். இரண்டு வயது வரையிலான குழந்தைகள் அவர்களைப் பாராட்டிப் பேசுவதை புரிந்துகொள்ளும் திறனைப் பெற்றிருக்க மாட்டார்கள் என பல பெற்றோர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பெற்றோர் செய்யும் தவறு
குழந்தைகளைப் பாராட்டிப் பேசுவதை பெற்றோர் தவிர்த்து விடுகிறார்கள். பாராட்டிப் பேசுவதை புரிந்து கொள்ளாவிட்டாலும், பெற்றோரின் முகத்தில் ஏற்படும் நல்ல முகபாவங்களைக் கொண்டு அம்மா, அப்பா பாராட்டுகிறார்களா அல்லது திட்டுகிறார்களா என்பதை குழந்தைகள் புரிந்து கொள்ளும். எந்தெந்த நடத்தைகளுக்கு பெற்றோரின் முகபாவம் மகிழ்ச்சியாக இருக்கிறதோ அந்நடத்தைகளை குழந்தை திரும்பத்திரும்ப வெளிக்காட்டும். சரியாக செய்திருக்கிறாய், அப்படித்தான் இருக்கவேண்டும், உன்னைப் பார்த்து மற்றவர்கள் நிச்சயம் கற்றுக்கொள்வார்கள், சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறாய், அழகாக செய்துள்ளாய், பரவாயில்லை சரியாகிவிடும், அடுத்த முறை சரியாக செய்துவிடுவாய், வெல்டன் போன்ற ஊக்கமளிக்கும் வார்த்தைகளையே உங்கள் குழந்தையிடும் பேசும்போது பயன்படுத்தவும். அவர்களது நம்பிக்கையை குறைக்கும் எந்த ஒரு செயலையோ சொல்லயோ கூறவேண்டாம். குழந்தைகள் பெற்றோர் சொல்வதைத் தான் முதலில் நம்புவார்கள், எடுத்தும் கொள்வார்கள்.
இன்றையக்காலக்கட்டத்தில் குழந்தைகளின் பழக்கவழக்கத்தில் பெற்றோர்கள் அதிகம் கவனம் செலுத்தவேண்டும். நம்மில் இருந்துதான் நம் குழந்தையின் பழக்கவழக்கம் பிரதிபலிக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.
பெரியவர்களிடம் பேசும் முறைகளை கற்றுக்கொடுக்கவேண்டும். யாரிடம் எப்படி பழகுவது என்பதை உணர்த்தவேண்டும்.
இந்த வயதில் புரியவைப்பது அவர்களின் மனதில் பசுமரத்தாணிபோல் பதியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பழக்கவழக்கங்கள்
சேமித்துப் பழகு
குழந்தைகளுக்கு பணத்தின் அருமையை மதிக்கவும், பணத்தின் மதிப்பை வாழ்நாள் முழுவதும் புரிந்து கொள்வதற்கான அடிப்படையையும் கற்றுத்தருவது அவசியமாகிறது.
குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை பார்த்து தான் எல்லாவற்றையும் கற்றுக் கொள்கின்றனர்.
தேவையில்லாத அல்லது முக்கியமில்லாத பொருட்கள் மீது செலவு செய்வதை நீங்கள் தவிர்க்கவும்.
நேர கட்டுப்பாடு
குழந்தைகள் முன்பு போல ஓடி ஆடி விளையாடுவது என்பது மிகவும் குறைந்து விட்டது. அவர்கள் இன்று திரை ஊடகங்களுக்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள்.
சாப்பிடும் போது அல்லது வீட்டுப்பாடம் செய்யும் போது சாதனங்களை பார்க்க அனுமதிக்க வேண்டாம்.
குழந்தைகள் பெரும்பாலும் வீட்டில் இருப்பவர்களை பார்த்து தான் கற்றுக்கொள்கிறது. பெற்றோர்கள் எப்போதும் டிவி பார்த்துக்கொண்டிருந்தால் பிள்ளைகள் டிவி பார்ப்பதை கட்டுப்படுத்துவது கடினம்.
குழந்தைகள் கற்றுக்கொள்ள விரும்பும் செயல்களில் ஓய்வு நேரத்தை அவர்களுடன் செலவிடுங்கள்.
அம்மாவும் அப்பாவும்
ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ, அம்மாவும் அப்பாவும் தான் அவர்களின் முதல் நண்பர்கள்.
அவர்களிடம் அவர்கள் வெளிப்படையாக இருப்பது நல்லது.
அப்பொழுதுதான் பல்வேறு பிரச்சனைகளை அவர்கள் கையாள முடியும்.
பெற்றோர்களின் கவனத்திற்கு
குழந்தைகள் உங்களிடம் கேட்பதற்கு முன்பே எதையுமே வாங்கிக்கொடுத்து பழக்காதீர்கள். இதனால் உங்கள் பிள்ளைகளுக்கு மற்றவர்களிடம் கேட்டு வாங்கும் திறமையை குறைத்துவிடுகிறீர்கள். அவர்கள் கேட்பதற்குமுன் தேவையில்லாததை வாங்கிக்கொடுப்பதற்கு முன், அவர்களுக்கு என்ன தேவை என்பதை அவர்களிடம் கேட்டு, அதை எப்படி நாகரீகமாக கேட்டு வாங்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுங்கள். அதுதான் பின்நாளில் அவர்களின் சிக்கனத்திற்கு அடித்தளமாக அமையும்.
குழந்தைகள் முன்பு தேவையில்லாத பேச்சுக்களை குறைத்துக்கொள்ளுங்கள். குழந்தைகளை அருகில் வைத்துக்கொண்டு எப்போதும் சண்டை போடுவது கடுமையான கெட்ட வார்த்தைகள் பேசுவது இதை முற்றிலும் விட்டுவிடுங்கள். குழந்தையின் மனதில் அனைத்தும் சுலபமாக பதியும். அவர்களும் நீங்கள் பேசுவது போலவே பேசுவார்கள். நீங்களாகவே குழந்தைகளை கெடுக்காதீர்கள். நல்லவைகளை மட்டும் அவர்கள் முன்பு பேசி பழகுங்கள்.
விமர்சனங்களை வன்முறையாக மாற்றுவது!
உங்கள் குழந்தைகள் தவறு செய்யும்போது, அவர்களை அடிப்பது, சத்தமாக திட்டுவது போன்ற விஷயங்களை செய்யாதிர்கள். பக்குவமாக எடுத்துச் சொல்லுங்கள். விமர்சனத்தை வன்முறையாகக் காட்டினால், குழந்தைகள் மனதில் வாழ்க்கைப் பற்றி எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும்.
ஊட்டி வளர்ப்பது!
குழந்தையின் வளர்ச்சிக்கேற்ப, அன்றாட வீட்டு வேலைகளை செய்ய வைப்பது பெற்றோரின் கடமையே. 10 வயது வரையிலும், உங்கள் குழந்தைக்கு ஊட்டி விட்டுக் கொண்டிருப்பது ஆரோக்கியமான பெற்றோர் வளர்ப்பு ஆகாது. எப்போதும் அவர்களை பெரியவர்களாக உங்களுக்குச் சமமாக நடத்துங்கள். சிறிய சிறிய வேலைகள் கொடுத்து தட்டிக் கொடுங்கள். பொறுப்புகளைக் கற்றுக் கொடுங்கள்.
அவர்களின் சிந்தனைகளை புறக்கணிப்பது!
குழந்தைகள் தங்களின் ஆறு வயது வரை என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்துகிறார்களோ, அந்த விஷயங்கள் தான், அவர்கள் மனதில் இறுதிவரை ஆதிக்கம் செய்யும். அதனால், அவர்களின் தேவைகளுக்கு அவர்களே தீர்வு காண விட்டுவிடுங்கள். அதில் அவர்கள் தவறு செய்தாலும் பரவாயில்லை! இதன்மூலம், தாமாகவே முடிவெடுக்கும் பண்பை குழந்தைகள் வளர்ந்துக்கொள்ள உங்கள் செயல்கள் உதவும்.
நேரம் ஒதுக்காமல் இருப்பது!
இன்றைய பொருளாதாரச் சுழலில், பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்லவேண்டியுள்ளது. அதனால், வேலை நாட்களில் குழந்தைகளுடன் போதுமான நேரத்தைச் செலவழிக்க முடியாமல் இருக்கலாம். அதைப் போக்க வார நாட்களை எடுத்துக்கொள்ளுங்கள். வார நாட்களில் குழந்தைகளுக்காக தனியாக நேரத்தை செலவிடுங்கள். அந்த நேரத்தில் போன், லேப்டாப், டிவி போன்றவற்றின் பக்கம் போகாமல் இருங்கள். அவர்களைப் பேசவிட்டு நீங்கள் ரசித்தாலே ஆனந்தமாவார்கள் குழந்தைகள். குழந்தையிடம் நீங்களாகவே சின்ன கேள்விகள் கேளுங்கள். அதற்கு அழகாக பதில் அளிக்கும் அழகை பாருங்கள். பதில் தெரியவில்லை என்றால் சொல்லிக்கொடுங்கள்.
கருத்துகள் இல்லை