நம் முன்னோர்கள் நாட்டுமாடுகளையும், பசுக்களின் மரபு இனங்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் கோசாலைகளும், காளைகளைப் பராமரிக்கும் கூடங்களும் கோயில்களில் அமைத்து உள்ளனர்.
பத்துக்கும் மேற்பட்ட பசுக்கள் மற்றும் காளைகள் வைத்திருக்கும் தொழுவத்தில் பிறக்கும் முதல் காளைக்கன்றையோ அல்லது மாட்டுப்பொங்கலின்போது பிறக்கும் காளைக்கன்றுகளையோ கோயிலுக்கு நேர்ந்துவிடும் பழக்கம் தமிழகத்தில் இருந்துள்ளது.
மேலும் தங்களின் நேர்த்திக்கடனுக்காகவும், தானமாகவும் கோவில்களுக்கு வழங்கி வந்தனர். இந்த காளைகள்தான் கோயில் காளைகள் என அழைக்கப்படுகின்றன.
இவற்றிற்கு தேவையான உணவு கோவிலில் காணிக்கையாக கிடைக்கும் தானியங்களில் இருந்தும், கோயிலுக்குச் சொந்தமான விவசாயநிலங்களில் இருந்தும் பெறப்படுகின்றன. இவை கோயில்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் பகுதி கோசாலை என அழைக்கப்படுகிறது. இப்படி கோயில்களில் நிர்மாணிக்கப்பட்ட கோசாலைகளில் நாட்டுக்காளைகளும் பசுக்களும் பாதுக்காக்கப்படுகின்றன.
இதற்கான முக்கிய குறிக்கோளாக கறவைக்கோ அல்லது உழவுக்கோ பயன்படாத நிலையில் இருக்கும் பசுக்களையும், காளைகளையும் வறுமையின் காரணமாக பணத்துக்காக அடிமாடுகளுக்கு விற்கும் அவலம் நேரிடலாமல் இருக்க நம்முடைய வழிபாட்டுக்கு உரிய இவற்றை கோயில்களில் கோசாலை அமைத்து பாதுகாத்துள்ளனர் நம்முடைய முன்னோர்கள்.
ஊர்க்காளைகள் என்று ஜல்லிக்கட்டுக்கு மட்டுமே சில காளைகளை வளர்த்துள்ளனர். இதன்மூலம் மறைமுகமாக நாட்டுப்பசுக்கள் மற்றும் காளைகளின் இனத்தைக் பாதுகாத்து உள்ளனர்.
பசுக்கள் என்பவை பழங்காலத்திலிருந்தே மனிதர்களால் வணங்கப்படும் ஒரு புனிதமான உயிராக உள்ளது. நம் முன்னோர்கள் பசுவிற்கு ஒரு கைப்பிடி புல் கொடுப்பது மிகச்சிறப்பு என்று கூறுவர்.
அத்தகைய சிறப்புமிக்க பசுவை கோவில்களில் கோசாலை அமைத்து பராமரித்து வருகின்றனர். அதாவது பசுக்களை கூட்டமாக அடைத்து வைத்திருக்கும் இடத்தை கோசாலை என்பர்.
அதற்கென பணியாளர்களும் நியமிக்கப்பட்டு பராமரித்து வருவர். கோசாலையானது கோவிலின் பின்புறம் ஒரு இடத்தை ஒதுக்கி கோவில் நிர்வாகம் பராமரித்து வருகிறது. இந்த பசுக்களில் இருந்து கிடைக்கும் பொருட்களை கோவிலுக்காக பயன்படுத்தி கொள்வர். அதாவது, பசுக்கள் மூலம் கிடைக்கும் பால், தயிர், வெண்ணெய் போன்றவற்றை கடவுளின் அபிசேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
கடவுளை வணங்க வரும் பக்தர்கள் கோசாலையையும் வணங்கி செல்வர். மேலும் பசுக்களுக்கு தீனியிடுதலான புல், வாழைப்பழம், அகத்திக்கீரை போன்ற பொருட்களை கொடுத்து வருவார்கள்.
இந்த பசுக்கள் நேர்த்திக்கடனாகவும், மாடு தானம் பெறுவது என்ற முறையிலேயே வளர்க்கப்படுகிறது.
கோசாலை அமைத்தல்
பசு வளர்ப்பில் மடம் அமைத்தல் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். அதனால் சரியான மாடுகளிலிருந்து இனப்பெருக்கம் செய்ய முடியும்.
ஒவ்வொரு பசுக்களுக்கும் இடையே போதுமான இடவசதி இருக்குமாறு அமைத்தல் சிறந்தது. பெரிய மாடுகளுக்கு 40 முதல் 50 சதுர அடி இடமும், சிறிய பசுக்களுக்கு 20 முதல் 25 சதுர அடி இடமும் தேவைப்படும்.
ஆண் மற்றும் பெண் மாடுகளை தனியாகவும், கன்றுக்குட்டிகளை தனியாகவும் வைத்து பராமரிக்க வேண்டும். கோசாலையில் போதுமான தண்ணீர் கிடைக்குமாறு அமைத்திட வேண்டும்.
கருத்துகள் இல்லை