காலரா என்றால் என்ன ?
வாந்திபேதி அல்லது காலரா என்பது, விபிரியோ காலரே (Vibrio cholerae) எனப்படும் பக்டீரியாவினால் உண்டாகும் தொற்றக்கூடிய குடலழற்சி (gastroenteritis) நோய் ஆகும். இப்பக்டீரியாவைக் கொண்ட உணவு அல்லது நீரை அருந்துவதன் மூலம் இந்நோய் மனிதருக்குத் தொற்றுகிறது. இந் நோயை உண்டாக்கும் பக்டீரியாக்களைத் தேக்கி வைத்திருப்பது மனித உடலே என்று முன்னர் பெரும்பாலும் நம்பப்பட்டது. ஆனால் நீர்சார் சூழலும் விபிரியோ காலரே என்னும் பக்டீரியாவைத் தேக்கி வைத்திருக்கக்கூடும் என்பதற்கான சான்றுகள் இப்போது அறியப்பட்டுள்ளன.
காலரா, உடலில் நீர் வறட்சி, வாந்தி, பேதியை உருவாக்கும் தன்மை கொண்டது. இந்த பாக்டீரியா சிறுகுடலை தாக்கி ஒரே இரவில் உயிரை பறிக்கும் அளவு திறன் கொண்டது. உலகளவில் 50 லட்சம் மக்கள் இந்த பாக்டீரியா மூலம் பாதிப்படைந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது, சுகாதாரமற்ற உணவு மற்றும் நீரின் மூலமாக பரவுகிறது. ஒவ்வொரு வருடமும் காலரா மூலம் 1,20,000 பேர் உலகில் மரணம் அடைகிறார்கள்.
காலரா நோய் வராமல் தடுக்கும் முறைகள் :
* குடிப்பதற்கும் மற்ற பயன்பாட்டிற்கும் பாதுகாப்பான தண்ணீரை மட்டுமே பயன் படுத்தவும். சீல் உடைக்கப்படாத பாட்டில் குடிநீர் குடிக்க வேண்டும்.
* பல் துலக்குவதற்கும், உணவுப்பொருட்களை கழுவுவதற்கும், உணவு சமைப்பதற்கும், பாதுகாப்பான தண்ணீரை மட்டுமே பயன்படுத்தவும்.
* சமையலறை மற்றும் உணவு அருந்தும் இடத்தை எப்போதும் சுத்தமாக கழுவி உலரவிட்டு பின் பயன்படுத்தவும்.
காலரா நோய் வந்தபின் காக்கும் முறைகள் :
* சுத்தம் செய்யப்பட்ட நீரை, எப்போதும் சுத்தமான பாத்திரத்தில் மூடியே வைப்பது அவசியம்.
* கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல் மிக மிக முக்கியம்.
* மலம் கழிப்பதற்கு கழிவறைகளை மட்டுமே பயன் படுத்தவேண்டும்.
* திறந்த வெளியிலோ அல்லது நீர் நிலைகளின் அருகிலோ மலம் கழிப்பது காலரா நோயை மிக வேகமாக பரப்பி அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும்.
{ மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம். }
உணவு முறைகள் :
* சுத்தமான உணவை மட்டுமே உண்ணவேண்டும்.
* மீன், இரால் போன்ற நீர் வாழ் உணவுகளை முற்றிலும் தவிர்த்தல் நல்லது.
* சமைத்த உணவை சுடச்சுட சாப்பிட்டுவிட வேண்டும்.
* எடுத்து வைத்து உண்பதோ, கெட்டுப்போன உணவை உண்பதோ கூடாது.
* உணவு பொருட்களை திறந்து வைக்கவே கூடாது.
* ஈக்கள் மொய்க்க விடக்கூடாது. ஈ மொய்த்த பண்டத்தை உண்டால் காலரா வரும் வாய்ப்பு மிக மிக அதிகம்.
* பச்சையாக காய்கறிகளை சாப்பிட வேண்டாம்.
* பழங்களில் தோலை உரித்துவிட்டு மட்டுமே சாப்பிடவேண்டும்.
* சிறிது காலம் வாழை இலையில் சாப்பிடுவதையும் தவிற்கவும்.
பரவாமல் தடுக்கும் முறைகள் :
* காலராவால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றால் பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுத்தமாக வைத்துக்கொள்வதுடன், 100 டிகிரி கொதிக்க வைத்த தண்ணீரை ஆற வைத்து பருக வேண்டும்.
* வெளியிடங்களுக்கு செல்லும் போது தரமற்ற தண்ணீர் பாக்கெட்டுகளை வாங்கி பருகுவதை தவிர்க்க வேண்டும்.
* கூடுமான அளவு, சாக்கடை கழிவுகள் தேங்கியுள்ள சாலைகளில் செல்லும் போதும், வெளியிடங்களுக்கு போய் விட்டு, வீட்டிற்கு வரும் போதும், கால்களை தண்ணீரால் சுத்தம் செய்து விட்டு உள்ளே செல்வது நலம் பயக்கும்.
கருத்துகள் இல்லை