குதிகால் வலி என்றால் என்ன?
* காலையில் எழுந்ததும் தரையில் நின்றால் சுள்ளென்று ஒரு வலி குதிகாலில் தொடங்கி, கால் முழுவதும் பரவும். மேலும் ஓர் அங்குலம் கூடக் காலை எட்டுவைத்து நடக்க முடியாது. மாடிப்படி ஏற முடியாது. இதற்கு குதிகால் வலி என்று பெயர்.
காரணங்கள் :
* குதிகால் எலும்பிலிருந்து பிளான்டார் அப்போநீரோசிஸ் (Plantar Aponeurosis) எனும் திசுக்கொத்து கால் கட்டை விரலை நோக்கிச் செல்கிறது. குதிகால் எலும்பும் இந்த திசுக்கொத்தும் இணையும் இடத்தில் ஒருவித அழற்சி ஏற்பட்டு, வீக்கம் உண்டாகிறது. இதனால் குதிகால் வலி ஏற்படுகிறது.
குதிகால் வராமல் தடுக்கும் வழிகள் :
* சிறு வயதிலிருந்தே நீச்சல் பயிற்சி, நடைப் பயிற்சி, மெல்லோட்டம் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்தால், குதிகால் வலி வருவதை தடுக்கலாம்.
* குதிகாலில் அடிக்கடி வலி வந்து சிரமப்படுபவர்கள், தொடர்ந்து நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.
* கரடுமுரடான பாதைகளில் நடக்கக்கூடாது.
* குதிகால் வலி உள்ளவர்கள் இதற்கென்றே உள்ள தசைப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
* குதிகால் வலிக்கு நல்லதொரு பயிற்சி சைக்கிள் ஓட்டும் பயிற்சி.
* உடல் பருமன் அதிகமாக இருந்தால் எடையைக் குறைக்க வேண்டும்.
* குதிகால் வலி ஏற்பட்டவர்கள் வெறுங்காலோடு நடக்கக்கூடாது. வீட்டுக்குள்ளும் காலணி அணிந்துதான் நடக்க வேண்டும்.
* பாதத்துக்குச் சரியான அளவில் காலணிகளை அணிய வேண்டும்.
* அழுத்தமான ஷுக்களை அணியக்கூடாது.
குதிகால் வலி வந்தபின் காக்கும் முறைகள் :
* வலி நீக்கும் களிம்புகளைக் குதிகாலில் பூசலாம்.
* காலையில் எழுந்ததும், வெதுவெதுப்பான தண்ணீரில் பாதத்தை ஒரு நிமிடம் வைத்திருக்க வேண்டும். பிறகு, சாதாரணத் தண்ணீரில் ஒரு நிமிடம் வைத்திருக்க வேண்டும். இப்படி மாறிக் மாறி குறைந்தது 20 நிமிடங்களுக்கு வைத்திருந்தால், குதிகாலுக்கு ரத்த ஓட்டம் அதிகப்படியாகக் கிடைக்கும். குதிகால் வலி குறையும்.
{ இருப்பினும் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம். }
உணவு முறைகள் :
* கால்சியம் உள்ள உணவுகள், காய்கறி, பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். அதாவது பாலில் கால்சியம் அதிகம் நிறைந்திருப்பதால் பெண்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் புரோட்டீன் பொடியை சேர்த்து குடிப்பதால், ஒரு நாளுக்கு தேவையான கால்சியம் சத்தைப் பெறமுடியும்.
* ஒட்ஸ், தயிர், வெள்ளைக்காராமணி, பச்சைக் கீரைகள், பாதாம் ஆகியவற்றை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி :
* கால்விரல் தட்டல் (Toe Tab) குதிகால் வலிக்கு ஒரு நல்ல பயிற்சியாகும். உங்கள் பாதத்தின் குதிப்பகுதி தரையில் திடமாக இருக்கும்படி வைத்தபடி கால் விரல்களை மட்டும் மேலே உயர்த்துங்கள். இப்பொழுது நான்கு விரல்கள் உயர்ந்தபடி நிற்க பெருவிரலால் மாத்திரம் தரையைத் தட்டுங்கள். இனி மறுபுறமாகச் செய்யுங்கள். அதாவது பெருவிரல் உயர்ந்து நிற்க மற்ற நான்கு விரல்களால் தரையைத் தட்டுங்கள். இவ்வாறு உடற்பயிற்சி செய்வதால் குதிகால் வலி குறையும்.
கருத்துகள் இல்லை